Logo
அருட்கவி காளிதாசர்

ஓம்

திருச்சிற்றம்பலம்

வாழ்க்கை வரலாறு

ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம். அனுமந்தபுரம் அருட்கவி ஸ்ரீ காளிதாசர் என்னும் புனைப்பெயர் கொண்ட அருளாளரின் தாய் தந்தையிட்ட பெயர் கன்னிவேலன். கன்னிவேலு என்று அழைப்பார்கள். அவர் தவயோகம் நிறைந்த சிவயோகி. அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்புடையவர். பொறுமை குணமும் கருணை உள்ளமும் கொண்டவர். நல்லொழுக்கத்திற்கும் தன்னடக்கத்திற்கும் இலக்கணமாக வாழ்ந்த உத்தம மனிதர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். இலக்கணமும் இலக்கியமும் அறிந்த பெரும்புலவர். திருநெறி ஈந்த அறநெறியாளர். அருட்கவியாய் மட்டுமல்லாது அருள்ஞானியாய் விளங்கியவர். பள்ளூர் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த யோகீஸ்வரரின் நண்பராக விளங்கிய ஆறுமுகப் பிள்ளை மற்றும் ராதா தம்பதியினருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வளர்குன்றம் எனும் கிராமத்தில் சுத்த சைவ சீர் கருணீகர் குலத்தில் 08.01.1943-இல் நன்மகனாகப் பிறந்தார். இவருக்கு மூத்த சகோதரர் ஒருவர் இருந்தார். அருட்கவி காளிதாசர் அவர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் B.A தமிழ் இலக்கியம் பயின்றவர். அருட்கவி அவர்கள் தம் இளம் பிராயத்திலேயே பள்ளூர் வெட்டவெளி ஞானப் பரம்பரை நான்காம் குருநாதர் பிரும்மஞான வித்யா பீடம் ஸ்ரீலஸ்ரீ நித்யானந்த யோகீஸ்வரர் சுவாமிகளிடம் ஒரு தைப்பூச நன்னாளில் சிவஞான தீட்சை பெற்ற பேறு பெற்றவர். முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது மைத்துனர் திரு.நாராயணன், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனர் திரு.எஸ்.அப்பாசாமி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நண்பராக விளங்கிய சென்னை மேற்கு மாம்பலம் சபாபதி பிள்ளை மற்றும் ராஜாம்பாள் தம்பதியினரின் ஒரே மகளும், வள்ளலார் இராமலிங்க அடிகளாரின் தாய்மாமன் மகள் வழி வந்த உறவினருமான ஈஸ்வரி (முனியம்மாள்) என்கிற நங்கையை 02.07.1964-இல் திருமணம் புரிந்தார். அருட்கவி அவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். அடியேன் அருட்கவியின் புதல்வன் சுப்பிரமணியன். அருட்கவி அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் அலுவலராகப் பணியாற்றியவர் (1966-87). தம் திருமணத்திற்கு பின் தாம் மறையும் வரை சென்னை மேற்கு மாம்பலத்தில் வாழ்ந்து வந்த அருளாளர். பல்வேறு கட்டங்களில் வெளியிடப்பட்ட அனுமந்தபுரம் அருட்கவி ஸ்ரீ காளிதாசர் திருவாய் மலர்ந்தருளிய பக்தி நூல்களை தொகுத்து "திருநெறி" என பெயர் சூட்டப் பெற்று முதல் பாகமாக 23 திருப்பதிகங்கள் அடங்கிய 702 தோத்திரப்பாக்கள் அச்சிடப்பட்டு திருசிற்றம்பலமுடையார் தம் குஞ்சித பதத்தின் கீழ் நின்று 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. திருநெறி நூலில் பக்கம் எண் 89 முதல் 96 வரையில் காணக் கிடைக்கவில்லை. மேலும், முதல் இரண்டு திருப்பதிகங்கள் (கணபதி கவசம் மற்றும் திருக்காரணித் திருப்பள்ளியெழுச்சி) செல்லரித்துப் போயிருந்தன. மீதமுள்ளவை மட்டும் இறைவன் அருளால் காப்பாற்றப்பட்டது. மேலும் அருட்கவி காளிதாசரின் தமிழ் ஞானத்தையும் இறை ஞானத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்த சிறந்த படைப்பாக "பெருவெளி போதம்" என்ற ஞான நூல் அவர் காலத்தில் வெளியிடப்பட்டது. 100 குறட்பாக்களைத் தன்னகத்தே கொண்டது பெருவெளி போதம். இந் நூலுடன் இணைந்து சோதிலிங்க மாலை என்ற திருப்பதிகமும் வெளியிடப்பட்டது. குறிப்பாக திருநெறி நூலில் இடம்பெற்ற "நவரத்தின மாலை" என்னும் திருப்பதிகம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அருள்மிகு சொர்ணாம்பிகை உடனுறை திருக்காரணீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. அருட்கவி இயற்றியருளிய முதல் பக்தி இலக்கியத்தின் பெயர் "வீரக் கலம்பகம்" என்பது. இப்பதிகம் வீரேச்சுரர் தம் அருள் நல மாட்சிமையை விளக்குவது. சைதைத் திருக்காரணீஸ்வரர் திருக்கோயிலில் இராஜகோபுரத் திருப்பணி வளர்ச்சிக்கு உதவும் பாங்கில், அத்திருக்கோயிலில் அருட்கவி ஸ்ரீ காளிதாசரின் 100 அருட்பாக்களைக் கொண்ட "அந்தரி அந்தாதி" என்னும் அம்பிகைத் துதி நூல் 07.02.1978-இல் புலவரேறு ந.ரா.முருகவேள், M.A; M.O.L, அவர்கள் தலைமையில் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் மேதகு பிரபுதாஸ் பட்வாரி அவர்களால் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் வேதாத்திரி மகரிஷி மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் திரு. எம். பக்தவச்சலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நூல் வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் நகலை அன்பர்கள் பார்வைக்காக இவ்விணையத்தளத்தில் வெளியிட்டுள்ளேன். சைதைத் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்தவரும், அருள்ஞானப் பெருவெளி எனும் அற நிலையத்தின் நிறுவனருமான வாழ்வியற் புலவர் தவத்திரு சொ.ர. தேமொழியார் மாட்டு நேயம் பூண்டவர் நம் அருட்கவி அவர்கள். அந்நிலைய நிர்வாகத்தால் 1979-இல் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது "காஞ்சனமாலை" என்னும் பக்தி இலக்கியம். காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் மீது பாடப்பட்ட சொற்சுவை பொருட்சுவை நிரம்பிய இனிமையான 25 அருட்பாக்களைத் தன்னகத்தை கொண்டது இந்நூல். இந்நூலினை கண்ணுற்ற பல ஆன்மீகப் பெரியோர்களும் அறிஞர்களும் அருட்கவி காளிதாசரின் தெய்வப் பணியை பாராட்டி வாழ்த்தி உள்ளனர். அவர்களுள் காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியார், தவத்திரு. குன்றக்குடி அடிகளார், வாழ்வியற் புலவர் தவத்திரு. சொ.ர.தேமொழியார் ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். அவர்களுள் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நம் அருட்கவி ஸ்ரீ காளிதாசரை வாழ்த்தி வெண்பாவில் வழங்கிய சாற்றுக்கவி பின்வருமாறு: காஞ்சன மாலையெனும் கன்னித் தமிழ்பாடல் வாஞ்சையுடன் பாடி வளம்பெற்றான் - தேஞ்சொல் திகழும் அருட்கவி சீர்காளி தாசன் தகவு கவி வாழ்க தழைத்து. அருளாளர் அருட்கவி ஸ்ரீ காளிதாசர் தமது நாற்பத்து நான்காம் அகவையில் (05.05.1987) இறைவனடி சேர்ந்தார். அவர் மறைந்த மறுநாள் அவர்பால் நேசம் கொண்ட அன்பர்கள் பலர் அருட்கவி காளிதாசரின் வாழ்க்கை வரலாற்றை துண்டு பிரசுரமாக அச்சிட்டு வெளியிட்டனர். அதன் ஒரு பிரதி மட்டும் அடியேனிடம் தற்போதும் உள்ளது. அத்துண்டுப் பிரசுரத்தின் இறுதி பத்தியில், "அருளாளர்களை ஆண்டவன் தன் அடிக்கு வெகு சீக்கிரமே அழைத்துக் கொள்கிறான். இளம் வயதிலேயே இறைவனடி சேர்ந்த விவேகானந்தர், அருட்பிரகாச வள்ளலார், பாரதியார் வரிசையில் நம் அருட்கவி காளிதாசரும் சேர்ந்துவிட்டார்" என்று சொல்லியிருந்தது அருட்கவியின் இறை ஞானமும் தமிழ் ஞானமும் எத்தகைய சிறப்புடையது என்பதை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது. மெய்யன்பர்களின் பார்வைக்காக அத்துண்டுப் பிரசுரத்தின் நகலை இந்த இணையத்தில் வெளியிட்டுள்ளேன். அருளாளர் அனுமந்தபுரம் அருட்கவி ஸ்ரீ காளிதாசர் திருவாய் மலர்ந்தருளிய "திருநெறி" என்னும் அருட்பாக்கள் நிறைந்த தோத்திர நூலையும், அந்தரி அந்தாதி, காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மை "காஞ்சனமாலை" (பொழிப்புரையுடன் கூடியது), பெருவெளி போதம் மற்றும் சோதிலிங்க மாலை, மடிப்பாக்கம் ஸ்ரீ மணிகண்டனை போற்றி அருளிய "மனோலய மாலை" மற்றும் சைதை அருள்மிகு சொர்ணாம்பிகையை போற்றித் துதித்து அருளிய "நவரத்தின மாலை" ஆகிய தோத்திர நூல்களை இறைவன் திருவருளால் அன்பர்கள் அனைவரும் கண்ணுற்று பாடி பரவிடும் வகையில் இன்றைய தினம் (28-05-2026) இணையத்தளத்தில் வெளியிடுவதில் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இணையத்தளத்தில் வெளியிட உதவிய திரு. ஆனந்தன் கோவிந்தராஜன் அவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சிற்றம்பலம்
அன்புடன்
க. சுப்பிரமணியன்

📘

அருட்பாடல் தொகுப்பு 1

அந்தரி அந்தாதி

பதிவிறக்கம்
📘

அருட்பாடல் தொகுப்பு 2

காஞ்சன மாலை

பதிவிறக்கம்
📘

அருட்பாடல் தொகுப்பு 3

காஞ்சன மாலை (விளக்க உரையுடன்)

பதிவிறக்கம்
📘

அருட்பாடல் தொகுப்பு 4

பெருவெளி போதம் & சோதிலிங்க மாலை

பதிவிறக்கம்
📘

அருட்பாடல் தொகுப்பு 5

மனோலய மாலை

பதிவிறக்கம்
📘

அருட்பாடல் தொகுப்பு 6

நவரத்தின மாலை

பதிவிறக்கம்
📘

அருட்பாடல் தொகுப்பு 7

திருநெறி

பதிவிறக்கம்